Sunday, May 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கை, கால்களில் கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி.. காங். நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கில் மர்மம்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி.. காங். நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கில் மர்மம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்தநிலையில் கிடந்த புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜெயக்குமார் உயிரிழப்பு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார், கடந்த 2-ஆம் தேதி மாயமான நிலையில், 4-ஆம் தேதி எரிக்கப்பட்ட நிலையில் அவரது தோட்டத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதனை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதில், நுரையீரலில் எந்த திரவமும் இல்லாததால், ஜெயக்குமார் இறந்த பின்னரே எரியூட்டப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில், எரிந்த நிலையில் உள்ள ஜெயக்குமார் தொடர்பான அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன. அதில், கை, கால்கள், கழுத்து மற்றும் உடலில் இரும்புக் கம்பிகள் கட்டப்பட்டிருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வேறு இடத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, பின்னர், அவரது தோட்டத்திற்கு கொண்டு வந்து உடலை எரித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும், உடற்கூராய்வின் பகுப்பாய்வு முடிவிற்காக காத்திருப்பதாகவும், அதன் பின்னரே கொலையா, தற்கொலையா என்ற இறுதி முடிவுக்கு வர முடியும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், தனிப்படைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, பலரின் பெயர்களை குறிப்பிட்டுள்ள நிலையில், அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.எல்.ஏ., ரூபி மனோகரனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். திருநெல்வேலியில் உள்ள தனியார் விடுதியில், தனிப்படை காவல் ஆய்வாளர கண்ணன், தங்கபாலுவிடம் 45 நிமிடங்கள் விசாரணை நடத்தினார். பின்னர், பேட்டியளித்த தங்கபாலு, தான் யாரிடமும் பணம் பெற்றது இல்லை என கூறினார்.

இதே போன்று, நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை, திசையன்விளை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு வரவழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

மரணமடைந்த ஜெயக்குமாரின் மகன்களான கருப்பையா ஜெப்ரின் மற்றும் ஜோ மார்டின் ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments