ஒவ்வொரு வருடமும் இந்தியாவில், தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் சற்று முன் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தேசிய குழு, சிறந்த படைப்புகளை தேர்வு செய்த அதற்காக விருதுகளை வழங்குகின்றன. இந்திய அளவில் மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படும் இந்த தேசிய விருதை வாங்க வேண்டும் என்பது திரை உலகில் உள்ள ஒவ்வொருவரின் கனவாக உள்ளது. அந்த வகையில், இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளுக்கும் , பிராந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கிய ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறந்த நடன இயக்குனருக்கான விருதை இப்படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்குதா பெண்ணே பெண்ணே’ பாடலுக்கு கொரியாகிராஃப் செய்த ஜான் மாஸ்டர் மற்றும் சதீஷ் ஆகியோர் பெற்றுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை, கலாநிதிமாறன் தயாரித்திருந்தார். 50 முதல் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் 110 கோடி வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.