தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள திரையரங்கில் சாமானியன் திரைப்பட 100-வது நாள் வெற்றி விழா வெள்ளிக்கிழமை (ஆக.30) படத்தின் நாயகனான ராமராஜன் தலைமையில் பொதுமக்கள், ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
சுமார் 12 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இருந்து பல்வேறு காரணங்களால் சற்று விலகியிருந்த, ராமராஜனின் திரையுலக வாழ்க்கையில் சமீபத்தில் வெளியான, `சாமானியன்’ திரைப்படம், அவருக்குப் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் நடித்து வெளியானதால் இப்படத்தை, ராமராஜனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் டிபிவி மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ராமராஜனின் சாமானியன் திரைப்படம் 100 நாள்கள் ஓடியிருக்கிறது. இத்திரையரங்கம் முன்பு லெட்சுமி நாராயணா என்ற பெயரில் இயங்கியபோது, வெளியான மிக அதிக நாள்கள் ஓடிய, அதிக ரசிகர்கள் பார்த்து ரசித்த படம் கரகாட்டக்காரன் ஆகும். தற்போது, அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இத்திரையரங்கம் டிபிவி மல்டிபிளக்ஸ் என உருமாறிய பிறகு பல்வேறு திரைப்படங்கள் வந்திருந்தாலும், முதன்முதலாக 100 நாள்களை தாண்டி, ஓடிய படமாக சாமானியன் அமைந்திருக்கிறது.