3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நேற்று தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் போட்டி திடீரென ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று தொடங்குகிறது. போட்டி நடைபெறும் ஓட்டலின் 9-வது தளத்தில் மின்கசிவு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து காரணமாக கடைசி நேரத்தில் போட்டி ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தீ விபத்தால் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. 9 சுற்றுகளை கொண்ட சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.