கோழியில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த செய்திகளால் பீதியடைந்த மக்கள் கோழி வாங்குவதை வெகுவாக குறைத்ததால் விற்பனை பாதியாகக் குறைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் கடந்த மாதம் 200 ரூபாய் வரை விற்கப்பட்ட கறிக்கோழி விலை இந்த வாரம் 100 ரூபாயாக குறைந்துள்ளது. உயிருடன் கோழி 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோழிக்கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 4 முட்டை இலவசமாக வழங்கப்படும் என்று அதிரடி ஆஃபர்களை வெளியிட்ட போதும் வாங்குவதற்கு ஆட்கள் வருவதில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நெல்லையிலும் கொரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் அச்சத்தால் கோழிக்கறி வாங்குவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கிய கோழிகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலுக்கு கறிக்கடைக்காரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் ஏற்பட்ட நஷ்டம் ஒருபக்கம் என்றால், விற்பனையாகாத கோழிகளை பராமரிக்க கூடுதல் செலவும் ஆவதால் என்ன செய்வதென தெரியாமல் உள்ளனர்.