கடந்த மார்ச் 27 அன்று, ஆர்.பி.ஐ முதலில் மார்ச் முதல் மே வரையிலான கடன் EMI தவணைகளை ஒத்திவைக்க அனுமதி கொடுத்தது. அதன் பின் கடந்த மே 22 அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் 3 மாதங்களுக்கு (ஜூன் – ஆகஸ்ட்) EMI தவணைகளை ஒத்திவைக்க அனுமதி கொடுத்தது.
EMI ஒத்திவைப்பு காலத்திலும், வட்டியை கணக்கிடும் பிரச்சனையை எதிர்த்து கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார். “ஒருபக்கம் மக்கள் நன்மைக்காக EMI ஒத்திவைத்து இருக்கிறார்கள். மறு பக்கம் ஒத்திவைக்கும் EMI-க்கு வட்டியும் போடுகிறார்கள். இந்த வட்டிச் சுமையையும் கடன் வாங்கியவர் தான் செலுத்த வேண்டும். இது ஒரு கையில் நன்மையை கொடுத்துவிட்டு, மறுகையால் அந்த நன்மையை பறிப்பது போல இருக்கிறது” என வழக்கு தொடுத்து இருக்கிறார்.
கொரோனா காலத்தில் பசி பட்டினியால் ஒரு தரப்பு மக்கள் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைத்து, எப்போது வழக்கமான வாழ்கையை வாழ முடியும் என ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். மறு பக்கம், அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்க்கும் நடுத்தர மக்களுக்கு EMI என்கிற எமன், வட்டி என்கிற பாசக் கயிற்றை போட்டு இழுத்துக் கொண்டு இருக்கிறான். EMI-ல் இருந்து தப்பிக்க, ஆர்பிஐ 6 மாதம் EMI-களை ஒத்திவைக்க அனுமதி கொடுத்து இருக்கிறது. ஆனால் வட்டி வழக்கம் போலத் தொடரும் எனச் சொல்லி இருக்கிறார்கள். அது தான் கொடுமையிலும் கொடுமை என தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷன் பெஞ்ச் விசாரித்து, இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கும், மத்திய ரிசர்வ் வங்கிக்கும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கச் சொல்லி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
அரசுதான் மக்களை வேலை பார்க்க விடாமல் தடுத்தது. அதே அரசு, மக்கள் வாங்கிய கடன்களுக்கு, EMI ஒத்திவைப்பு காலத்திலும் வட்டியை செலுத்தச் சொல்கிறது. அரசும், ஆர்பிஐ அமைப்பும் ஏன் இயற்கை நீதி-ஐ மீறவில்லை என நினைக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த நீதிமன்றம் விரும்புவதாகச் சொல்லி இருக்கிறது.