தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,156 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 20,993 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது.
1,515 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 76.30 சதவீதத் தொற்று சென்னையில் (1,156) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 31,667-ல் சென்னையில் மட்டும் 22,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 69.94 சதவீதம் ஆகும்.
16,999 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 53.68 சதவீதமாக உள்ளது. நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையை விட ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 31 ஆயிரம் என்கிற எண்ணிகையைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்துக்கு தமிழகம் வந்துள்ளது.
சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழக தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 269 பேரில் சென்னையில் மட்டுமே 212பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 78.81 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 22,149-ல் 212 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் .95% என்கிற எண்ணிக்கையில் உள்ளது.
இதனால் சென்னையின் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அளவில் மகாராஷ்டிராவில் 82,968 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 31,667 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 27,654 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 19,592 ஆக உள்ளது.