சென்னை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு பொதுமுடக்கம் வரும் ஜூன் 19-ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் திறக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் 30-ந் தேதி வரை மூடப்படும்.
இதனால் மதுவை கள்ள சந்தையில் விற்க டாஸ்மாக் ஊழியர்கள் உதவியுடன் கள்ளச்சந்தை வியாபாரிகள் பெருமளவில் மதுவை வாங்கி பதுக்கியுள்ளனர். பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நேற்றும், இன்றும் கடை ஊழியர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் மொத்தமாக விநியோகம் செய்து விட்டு, சில்லறை விநியோகம் செய்யாமல், வரிசையில் நின்ற மது பிரியர்களை பலமணி நேரம் காக்கவைத்து, பின்னர் சரக்கு காலியாகிவிட்டது என்று திருப்பி அனுப்பியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பக்கம், சுடுகாட்டு சாலையில் உள்ள கடையில் மாலை வரை வரிசையில் நின்று சரக்கு கிடைக்காமல் ஏமாந்து திரும்பிய மதுபிரியர் ஒருவர் கூறுகையில், “இந்த பகுதியில் ஒரே ஒரு கடை உள்ளது. இங்கு வரிசையில் நிற்பவர்களுக்கு ஒரு பாட்டில் கூட வழங்கப்படவில்லை. டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களது நண்பர்களை அலைபேசியில் அழைத்து பெட்டி பெட்டியாக கொடுத்தனுப்பினார்கள். பின்னர் பல மணிநேரம் கால்கடுக்க வரிசையில் நின்ற எங்களுக்கு சரக்கு தீர்ந்து விட்டது என்று கூறி கடையை மூடிவிட்டனர். இந்த கடைக்கு சப்ளை செய்யப்பட்ட முழு சரக்கும் கள்ளச்சந்தை விற்பனைக்கு சென்று விட்டது. இதற்கு காவலுக்கு நின்ற போலீசாரும் உடந்தை என்றார்”.
தாமிரபக்கம் பகுதியில், கள்ளச்சந்தையில் பலமடங்கு அதிகமான விலையில் பாட்டில் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. கள்ளச்சந்தை வியாபாரிகளை மடக்கிப்பிடித்து அரசு நடவடிக்கை எடுக்குமா?