இந்தியா – சீனா எல்லை பிரச்சினை கடந்த சில வாரங்களாக பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த 6ஆம் தேதி இந்தியா- சீனா இடையேயான ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால் எல்லையில் இருந்து சீன படைகள் படிப்படியாக திரும்ப பெறப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவு இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது, இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு மொத்தம் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக ராணுவத்தின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ராணுவ வீரர்கள் 76 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – சீனா இடையேயான தாக்குதல் குறித்து கடந்த வியாழக்கிழமை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், எந்த ஒரு இந்திய வீரரும் மாயமாகவில்லை என உறுதி படுத்தப்பட்டிருந்தது. அதன் பொருள் என்னவென்றால், மோதல்களில் ஈடுபட்ட அனைத்து வீரர்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளனர் என்பதாகும். அத்துடன், சீனாவின் பிடியில் இந்திய வீரர்கள் சிக்கியுள்ளதாக அதில் எந்த தகவலும் இடம் பெறவில்லை.
அதேசமயம், சம்பவ இடத்தில் இரு நாட்டின் ராணுவ அதிகாரிகளும் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சீனாவின் பிடியில் இருந்த 4 அதிகாரிகள் உள்பட 10 இந்திய ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பியுள்ளனர். வழக்கமான நடைமுறையின்படி, அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வியாழன்கிழமை வரை மூன்று கட்டங்களாக மேஜர் ஜெனெரல் மட்டத்திலான பரபரப்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, இந்திய வீரர்கள் மாயமானது குறித்து ராணுவம் தெரிவிக்காதது ஏன் என்றும், எல்லையில் அர்ப்பணிப்புடன் செயல்படும் வீரர்களின் நிலைமையில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படாதது தொடர்பாகவும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.