சீன விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சீனா வெட்கமின்றி சட்டவிரோதமாக இந்திய பகுதிகளான கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பங்கோங் த்சோ ஏரி போன்ற பகுதிகளில் ஏப்ரல் 2020க்கு இடையில் பல ஊடுருவல்களை மேற்கொண்டு இன்று வரை உரிமை கோர முயல்கிறது. அச்சுறுத்தல்களால் நாம் பாதிக்கப்பட மாட்டோம். நாம் பிராந்திய ஒருமைப்பாட்டுடன் சமரசம் செய்ய அனுமதிக்க முடியாது.
கடந்த ஜூன் 15-16ல் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது நாட்டின் 20 ராணுவ வீரர்களை இழந்து நிற்கிறோம். தேசத்திற்காக தங்கள் சேவையின் போது உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். தங்களுடைய கடைசி மூச்சிருக்கும் வரை தாய்நாட்டைக் காப்பதற்காகப் போராடியுள்ளனர். அவர்களின் தியாகம் வீணாக அனுமதிக்கக் கூடாது.
இப்படியான சூழலில் நமது அரசின் முடிவுகளும், செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. நமது செயல்கள் மூலமே வருங்கால சமுதாயத்தினர் நம்மை உணர்ந்து கொள்வர். ஜனநாயக நாட்டில் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய நிலையில் பிரதமர் இருக்கிறார். தேசத்தின் பாதுகாப்பைக் கருதி பிரதமர் பயன்படுத்தும் வார்த்தைகளையும், எடுக்கும் முடிவுகளையும் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.
தவறான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது. கர்னல் பி.சந்தோஷ் பாபு மற்றும் இறுதி தியாகம் செய்த நமது ராணுவ வீரர்களுக்கு நீதியை உறுதிசெய்து, நமது பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்கும் வகையில் செயல்பட , பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். குறைவானதைச் செய்வது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குச் செய்யும் வரலாற்று துரோகமாகும். ஒரு தேசமாக நாம் ஒன்றாக நின்று சீனாவின் வெட்கக்கேடான அச்சுறுத்தலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய தருணம் இது என்று கூறி உள்ளார்.