கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமையன்று ஜூன் 19ஆம் தேதியன்று பென்னீஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர். இதற்குப் பிறகு, பென்னீசையும் அவரது தந்தை ஜெயராஜையும் கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது, எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் 22ஆம் தேதி, திங்கள்கிழமை மாலை நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பென்னீசை பணியில் இருந்த வார்டன்கள் மீட்டு துணைச் சிறையின் கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அவர் இரவு ஒன்பது மணியளவில் இறந்துவிட்டார். அதற்கு சிறிது நேரத்திலேயேபென்னீஸின் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.
இதையடுத்து இறந்தவர்களின் உறவினர்கள் சாத்தான்குளத்தில் போராட்டத்தில் இறங்கினர். இவர்களுக்கு ஆதரவாக, பேய்க்குளம், திசையன்விளை ஊர்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
பென்னீஸும் ஜெயராஜும் தரையில் உருண்டதால், காயம் ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். யாராவது காயம் ஏற்படும்படி தரையில் உருள்வார்களா? மேலும், சாத்தான்குளத்திற்கு அருகிலேயே பல கிளைச் சிறைகள் இருக்கும்போது 100 கி.மீ. தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தது ஏன்? என இறந்தவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
காவல்துறையினர் காவலில் இருக்கும்போது பென்னீஸின் ஆசன வாயில் லத்தியால் குத்தியதால் ஏற்பட்ட ரத்தப் போக்கினாலேயே அவர் உயிர் பிரிந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், அவர்களது உடல்கள் வைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார். இதற்குப் பிறகு, சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவிட்டிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களுமே இடமாற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவித்திருக்கிறார்.
காவல்துறையினரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே வணிகர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். வணிகர்கள் காவல்துறையில் தாக்கப்பட்டு இறந்திருப்பதால், நாளை கடைகளை அடைக்கப்போவதாக வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
|