நாகர்கோயில்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் கோட்டாறு பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் சித்த மருத்துவத்துறை, ஆயுர்வேத மருத்துவத் துறை மருத்துவர்கள் நேரடியாக களத்திற்கு சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு பல்வேறு வகையில் ஊக்கம் அளித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக அரசுக்கு கோரிக்கை விடுத்தால் அதற்கான அனுமதியை அரசு வழங்க தயாராக உள்ளது.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதற்கான மருத்துவ வசதிகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் டெக்னீசியன்கள் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் தமிழக அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளது. இருப்பினும் எதையும் எதிர்பாராமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மக்களுக்காக ஒதுக்கி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஒரு லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். பிளாஸ்மா தானம் செய்ய அவர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.