லண்டன்
கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதனை உறுதியாக கூற முடியாது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகத்தை முடக்கியுள்ளது. உலக நாடுகள் பலவும் ஊரடங்கை அமல்படுத்தியும், கட்டுப்பாடுகள் விதித்தும், கொரோனா கட்டுக்குள் வரவில்லை. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்த ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது கட்டமாக மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டறியும் குழுவின் தலைவரான சாரா கில்பர்ட் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது சாத்தியம் தான். ஆனால் அதற்கு எவ்வித உறுதியும் கூற முடியாது. ஏனென்றால் நமக்கு மூன்று விஷயங்கள் நடக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி மருந்து, இறுதி கட்ட சோதனைகளில் வேலை செய்ய வேண்டும். பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் மற்றும் அவசரகால பயன்பாட்டிற்கு உரிமம் வழங்க கட்டுப்பாட்டாளர்கள் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முன்னரே, ஒரே நேரத்தில் இந்த மூன்று விஷயங்களும் நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செப்டம்பருக்குள் ஒரு மில்லியன் அளவுக்கு தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்காக ஆஸ்ட்ராஜெனிகா உடன் ஒப்பந்தம் செய்திருந்தாலும், பிரிட்டனில் கொரோனா தொற்றின் பரவல், அதன் செயல்திறனை நிரூபிக்கும் செயல்முறையை சிக்கலாக்கியுள்ளது. இறுதிக்கட்ட பரிசோதனைகள் பிரேசில், தென்னாப்பிரிக்கா நாடுகளில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் விரைவில் துவங்கவுள்ளது.
இது குறித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் ஜான் பெல் கூறியிருப்பதாவது:
கொரோனா மருந்தை செலுத்தி பரிசோதிக்க போதுமான நபர்களை பெறுகிறோமா என்பது முக்கியமான ஒன்றாகும். அவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி, அது நோயைத் தடுக்கிறதா மற்றும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதற்கான சரியான முடிவுகளை பெற வேண்டும். இங்கிலாந்தில் குறைந்த பாதிப்பு விகிதங்களைக் கொண்டுள்ளதால், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படும் இறுதிகட்ட பரிசோதனை முடிவுகள், போதுமான தரவுகளை தருமென நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.