சென்னை
தமிழகத்தில் இன்று (ஜூலை 22) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,492 ஆகவும், பலி எண்ணிக்கை 2,700 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று 5,849 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,775 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 74 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 113 ஆய்வகங்கள் (அரசு -58 மற்றும் தனியார் – 55) மூலமாக, இன்று மட்டும் 60,112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 20 லட்சத்து 95 ஆயிரத்து 757 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,481 பேர் ஆண்கள், 2,368 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,13,319 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 73,150 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,910 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 583 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 74 பேர் உயிரிழந்தனர். அதில், 24 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,700 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,344 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மொத்த உயிரிழப்புகளுடன் 444 மரணங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 10 வரை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படடி 444 மரணங்கள் விடுபட்டது கண்டறியப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.