Friday, December 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமா30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு வேண்டுகோள் - பாரதிராஜா

30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு வேண்டுகோள் – பாரதிராஜா

சென்னை

தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வைத்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணி செய்யுங்கள்.

திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும். கரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்குக் கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும்.

அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம் இதெல்லாம் தயாரிப்பாளரின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும்.

தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்தக் கடினமான சூழ்நிலையை உணர்ந்து, ஏற்கனவே சில நடிகர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட சம்பளத்திலிருந்து 30 சதவீதம் குறைத்துக்கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டும் இந்தத் தருணத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா?

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் துறையில் அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் தாமே முன்வந்து தங்களின் சம்பளத்தில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டுக் கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா?

எல்லோரையும் கேட்கவில்லை. ரூபாய் பத்து லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறைந்தபட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை (30%) விட்டுக் கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துத் தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன்.

இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளத்தைப் பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள். ஆனால், முடிவடைய வேண்டிய படங்களுக்கு உங்கள் பங்களிப்பைக் கொடுத்து 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து சினிமா உலகம் மீண்டெழ உதவக் கேட்டுக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். மீண்டெழ கைகள் கோப்போம். சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் வாழவைப்போம். இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments