Wednesday, January 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇலங்கைஇலங்கையில் திறமைக்கு இடமில்லை, இனத்திற்கே முக்கியத்துவம் - நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன்

இலங்கையில் திறமைக்கு இடமில்லை, இனத்திற்கே முக்கியத்துவம் – நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன்

தமிழ் நாட்டில் சேலம் சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் இந்திய கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்டு சாதிக்கின்றான், ஆனால் எங்களுடைய இலங்கையில் 2 கோடி மக்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் கவலை வெளியிட்டதுடன், இதுதான் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இருக்கின்ற வித்தியாசமாகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியாவில் 100 கோடி பேரில் ஒரு தமிழன் நடராஜன் தெரிவு செய்யப்படுகின்றான். ஆனால் இலங்கையில் 2 கோடியில் ஒரு தமிழனைத் தெரிவு செய்ய முடியாமல் உள்ளது கவலைக்குரியது. இங்கு திறமைக்கு இடமில்லை இனத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அனைவரும் பேசுகின்ற ஒரு விஷயம் தான் தமிழ்நாட்டு சேலம் சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழன் நடராஜன் பற்றியது. அவன் ஒரு தமிழனாக இந்திய கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்டு தன்னுடைய திறமையைச் சர்வதேச அரங்கில் நிரூபித்து கொண்டிருக்கின்றான்.

அது மட்டுமல்லாமல் அவன் சர்வதேச தொலைக்காட்சி ஒன்றிற்கு ஆஸ்திரேலியா மண்ணிலிருந்து தமிழ் மொழியில் தன்னுடைய பேட்டியை வழங்குகின்றான்.இதன் மூலம் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கின்றான்.

எனினும் எங்களில் ஒரு சிலர் கடந்த காலத்தில் கிரிக்கட்டில் சாதனை செய்திருந்தாலும் அவர்கள் எனக்குத் தமிழ் தெரியாது எனக் கூறுவதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் நடராஜன் தமிழில் பேசி அவர்களுக்கெல்லாம் ஒரு பாடம் புகட்டுவது போல அசத்திவிட்டான்.

இன்று இலங்கையில் நடைபெறுகின்ற எல்.பி.எல் போட்டிகளில் எத்தனை தமிழர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது ஒரு சிலருக்கு மாத்திரமே.

ஏன் திறமையானவர்கள் இல்லையா? திறமை இருந்தாலும் அவன் தமிழனாக இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதே உண்மை.

இது விளையாட்டில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இதே நிலைதான். அது அரசியலாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த துறையாகவும் இருக்கட்டும் தமிழனுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என அவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வர முடியும். இந்தியாவின் இரும்பு பெண்மணி எனப் போற்றப்பட்ட இந்திராகாந்தியைக் கொலை செய்த சீக்கிய இனத்தைச் சார்ந்த ஒருவர் பிரதமராக வர முடியும். இன்னும் பல சமூகத்தைச் சார்ந்தவர்கள் உயர் பதவியை வகிக்க முடியும். அவர்களின் திறமைக்கு மாத்திரமே அங்கே முதலிடம் கொடுக்கப்படுகின்றது.

ஆனால் இலங்கையில் இனரீதியாகவே இவை அனைத்தும் பார்க்கப்படுகின்றது. இது ஒரு பெரும் சாபக்கேடாகும்.

இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் 100 வீதம் இனத்துவேசம் பேசப்படுகின்றது. ஆனால் இதனை அரசாங்கம் தடுத்து நிறுத்துவதோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்களையோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இது மிகவும் கவலைக்குரிய ஒரு செயற்பாடாகும்.இது ஆளும் கட்சியில் மாத்திரம் அல்ல. எதிர்க்கட்சியில் இருக்கின்ற ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனத்துவேசமாகவே பேசுகின்றார்கள்.

இந்த விஷயங்களை ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வண்மையாகக் கண்டிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments