பிரதமர் நரேந்திர மோடியின் வாராணசி அலுவலகம் விற்பனைக்கு என்று ஓஎல்எக்ஸில் விளம்பரப்படுத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாராணசி தொகுதியின் மக்களவை உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தைப் புகைப்படம் எடுத்த குற்றவாளிகள், அதனை ஓஎல்எக்ஸ் என்ற இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளதாக பதிவு செய்துள்ளனர்.
இந்த அலுவலகம், ஜவகர் நகர பகுதியில், பெலுப்பூர் காவல்நிலைய எல்லைக்குள் இருக்கிறது. இந்த நிலையில், இது குறித்த தகவல் நேற்று கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாக வாராணசி காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பதக் கூறினார்.
உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.இதில் தொடர்புடைய நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினோம், அதில், அவர்கள்தான் அலுவலகத்தைப் புகைப்படம் எடுத்து ஓஎல்எக்ஸில்.பதிவிட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அமித் பதக் கூறியுள்ளார்.