கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் மட்டும் இந்தியாவில் 24.6 மில்லியன் பயனர்கள் சிக்னல் செயலியை இன்ஸ்டால் செய்துள்ளனர்.
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் வாட்ஸ்அப். உலகளவில் வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய பயனர் தளமாக இந்தியா இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது ‘பிரைவசி பாலிசி’ எனப்படும் புதிய தனியுரிமை கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது.
இதன்படி தன் பயனாளிகள் குறித்த தகவல்களை சேகரித்து, ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக கூறி, புதிய தனியுரிமை கொள்கையை வாட்ஸ்அப் வெளியிட்டது. இந்த புதிய கொள்கையை பிப்ரவரி 8ம் தேதிக்குள் வாட்ஸ்அப் பயனாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் இல்லையெனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது.
இந்த புதிய தனியுரிமை கொள்கை பயனர்கள் மத்தியில் அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியதை தொடர்ந்து, வாட்ஸ்அப் பயனர்கள் ‘சிக்னல்’, ‘டெலிகிராம்’ உள்ளிட்ட வேறு செயலிகளுக்கு மாறத்தொடங்கியனர். இதையடுத்து தங்களது புதிய தனியுரிமை கொள்கையை அமல்படுத்துவதை தள்ளி வைப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்தது.
எனினும், வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக, “சிக்னல்”, “டெலிகிராம்” செயலிகளை நோக்கி படையெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் மட்டும் இந்தியாவில் 24.6 மில்லியன் பயனர்கள் சிக்னல் செயலியை இன்ஸ்டால் செய்துள்ளதாக சமூக ஊடக தளமான லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் வாட்ஸ்அப் பயனர்களில் 36 சதவீதத்தினர், வாட்ஸ்அப் பயன்படுத்துவதை வெகுவாகக் குறைத்துள்ளனர் எனவும் 15 சதவீத பயனர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்களில் 24 சதவீதம் பேர் ‘சிக்னல்’ மற்றும் ‘டெலிகிராம்’ போன்ற பிற மாற்று செயலிகளுக்கு மாறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் ஜனவரி 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையில், வாட்ஸ்அப் அதன் பதிவிறக்கங்களில் 35 சதவீதம் குறைந்துள்ளதாகவும் லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வு கூறுகிறது.