மங்கோலியா நாட்டில், புதிதாக குழந்தை பெற்றெடுத்த தாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் குழந்தையோடு தனிமைப்படுத்தும் அறைக்கு அந்த தாய் மாற்றப்படும் வீடியோ ஒன்று சமீபத்தில் அந்தநாட்டு மக்களிடம் வேகமாகப் பரவியது. அந்த வீடியோ மூலம், கடுமையான குளிரின்போது, வெறும் மருத்துவமனை உடையையும், சாதாரணமான ஸ்லிப்பரையும் அணிந்த நிலையில் அந்த தாயார், தனிமைப்படுத்தும் அறைக்கு மாற்றப்படுவது தெரியவந்தது.
குழந்தை பெற்ற பெண்ணுக்கு, குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எந்த வசதியும் வழங்கப்படாமல் வேறு அறைக்கு மாற்றப்படுவது அந்நாட்டு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து மங்கோலிய மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டம், கொரோனா தொற்று பரவும் சூழ்நிலையை மங்கோலிய அரசு கையாண்ட விதத்தைக் கண்டிக்கும் விதமாக மாறியது.
இதனைத் தொடர்ந்து, குழந்தை பெற்ற பெண்ணைக் கையாண்ட விதம் தவறு என்றும், அதற்கு பொறுப்பெடுத்துக் கொள்ளவதாகவும் கூறி, மங்கோலிய பிரதமர் உக்னகின் குரேல்சுக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.