கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மே 20-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் (பொறுப்பு) மற்றும் இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இடது ஜனநாயக முன்னணியின் அமைச்சரவை குறித்து ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த விஜயராகவன் கூறியதாவது:
21 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை கேரள அரசில் இடம்பெறுகிறது. கொரோனா சூழல் காரணமாக குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையுடன் மே 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரள காங்கிரஸ் (எம்), ஜனதா தளம் (எஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குத் தலா 1 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 2 இடங்கள் சுழற்சி முறையில் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஜனாதிபத்ய கேரள காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய லீக் கட்சிகளும், அதன்பிறகு கேரள காங்கிரஸ் (பி) மற்றும் காங்கிரஸ் (எஸ்) அமைச்சரவையில் அங்கம் வகிக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்தவர் பேரவைத் தலைவர் பொறுப்பை வகிப்பார். பேரவை துணைத் தலைவர் பொறுப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தலைமைக் கொறடா பொறுப்பு கேரள காங்கிரஸ் (எம்)-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கான இலாகாக்களை முடிவு செய்யும் அதிகாரத்தை இடது ஜனநாயக முன்னணி முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கியுள்ளது என்றார் அவர்.
கேரள பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க வால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.