சென்னை
கொங்கு நாடு தனி மாநிலம் என்பது ஜாதிய அடிப்படையிலான பிரிவினை; அப்படி பிரிக்க வேண்டுமானால் இந்தியாவையே 2 ஆக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நானும் தெருவில் இறங்கி விளையாடவா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
கொங்கு நாடு தனி மாநில விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசிடம் ஏராளமான கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம். ஆனால் அதை எல்லாம் மத்திய அரசு நிறைவேற்றுவதில்லை. தமிழக மக்கள் கேட்காத கொங்கு நாடு தனி மாநிலம் என்பதை நிறைவேற்ற முயற்சிக்கிறது.
பொதுவாக மாநிலங்கள் பிரிவினை என்பது மொழி, இனம், நிலம் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜாதிய அடிப்படையில் கொங்கு நாடு என பிரிக்க முயற்சிப்பதை எப்படி ஏற்க முடியும்? அப்படியானால் இந்தியாவை 39 நாடுகளாக பிரிக்க வேண்டும்.
நாங்கள் கேட்பது மாநில தலைநகரங்கள் 4 ஆக இருக்கட்டும் என்பதுதான்.. நான் சொல்வதைத்தானே ஜெகன் மோகன் ரெட்டி, மமதா பானர்ஜி பேசுகிறார்கள். உண்மையில் இந்தியாவை தென்னிந்தியா, வட இந்தியா என உலக நாடுகளின் பிரிவினையின் அடிப்படையில் பிரிக்க வேண்டும்.
கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலமாக்கினால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் கூட ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்பதுதான் நிலைமை.
கொங்கு நாடு தனி மாநிலப் பிரிவினையை தொடங்கினால் இந்தியாவை 2 ஆக பிரியுங்கள் என நான் இறங்குவேன். எல்லோரும் பூனைக்கு மணி கட்டுவது யார் என காத்திருக்கிறார்கள். நான் தெருவில் இறங்கி விளையாட தொடங்கவா? இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.