கொழும்பு
இலங்கையில் இதுநாள் வரை பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்களுக்கு மட்டுமே கடுமையான நெருக்கடி நிலவி வரும் நிலையில், இப்போது அங்கு அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மருத்துவ அவசர நிலையை அறிவித்துள்ளது அரசு மருத்துவ அலுவலர்கள் கூட்டமைப்பு.
மின்வெட்டு, அத்தியாவ மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அந்நாட்டு மக்கள் பலர் அவசர அறுவை சிகிச்சைகளைக் கூட செய்து கொள்ள முடியாத இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் மருத்துவ அலுவலகர்கள் கூட்டமைப்பானது அவசர பொதுக் கூட்டத்தை நடத்தியது. அதில் நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் பேசிய இலங்கை அரசு மருத்துவ அலுவலர்கள் கூட்டமைபபின் (GMOA) செயலர் மருத்துவர் ஷனல் ஃபெர்னாண்டோ, “நோயாளிகளின் உயிரைக் காக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிர்வாகத் திறனின்மையாலே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். இதேநிலை நீடித்தால் இன்னும் நிலைமை மோசமாகலாம். நோயாளிகள் சிகிச்சையே கிடைக்காமல் உயிரிழக்கலாம் என்று மருத்துவக் கூட்டமைப்பின் சார்பில் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியே இலங்கை அரசானது மருத்துவ சேவைகளை அத்தியாவசிய சேவை என அறிவித்து உத்தரவு பிறப்பித்தது. அதனை சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர் ஃபெர்னாண்டோ, “அதன் பின்னராவது இலங்கை அரசு உயிர் காக்கும் மருந்துகள் உள்பட அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்திருக்க வேண்டும். அதனால் சுகாதார அமைச்சகமே இந்த நிலைமைக்கு முழுப் பொறுப்பு என்று” கூறியுள்ளார்.
அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்கும் வரை அரசு தொடர்ந்து செயல்பட ஏதுவாக இடைக்கால அமைச்சர்களாக 4 பேரை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று உத்தரவிட்டார். அதிபர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் 4 பேரும் உடனடியாக பதவியேற்றுக் கொண்டனர். அலி சாப்ரி, புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற கட்சித் தலைவர் குணவர்த்தன கல்வி அமைச்சராகவும் அரசு தலைமை கொறடா ஜான்ஸ்டன் பெர்னாண்டோ நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் பேராசிரியர் ஜி.எல்.பெரிஸ் வெளியுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு மக்கள் மற்றும் வருங்கால தலைமுறையினரின் நலனுக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த அரசை அமைக்க வேண்டும். இதற்காக, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அமைச்சக பொறுப்பை ஏற்க முன்வர வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.
கோத்தபய ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என இலங்கை மக்கள் விரும்புகின்றனர். மக்கள் விருப்பத்திற்கு மாறாக நாங்கள் செயல்பட முடியாது. இந்த ஊழல் அரசாங்கம் ஒழிய வேண்டும் என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான எஸ்ஜேபி (SJB) கட்சியின் ரஞ்சித் மடுமா பண்டாரா தெரிவித்தார்.