தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து தான் தொலைக்காட்சியில் பார்த்து மட்டுமே தெரிந்து கொண்டதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது தவறான தகவல் என அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அதன் அறிக்கையில் கூறியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையின் விவரம் வெளியானதைத் தொடர்ந்து அதில் சாட்சியம் அளித்தவர்கள் பேசியது என்ன, சம்பவம் தொடர்பாக அவர்களுக்கு இருந்த பங்களிப்பு என்ன போன்ற விவரங்களை ஆணையம் அதன் அறிக்கையில் விவரித்திருக்கிறது.
அருணா ஜெகதீசன் அறிக்கையில், “பிறரை போல தானும் ஊடகங்களை பார்த்துதான் ஸ்டெர்லைட் கலவரம் பற்றி தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார் ஆனால் அரசின் அப்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி கே. ராஜேந்திரன், உளவுத் துறை ஐஜி கே. என். சத்யமூர்த்தி ஆகியோர் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரம் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவித்திருப்பதாக கூறிய ஆதாரம் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி கூறியது பொய் என்று தெரிய வருகிறது” என கூறப்பட்டுள்ளது.