டாடா தயாரிப்பை ஓரம் கட்டும் வகையில், விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG). இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். சீனாவை சேர்ந்த செயிக் மோட்டார் (SAIC Motor) குழுமத்தின் ஒரு அங்கமாக எம்ஜி இயங்கி வருகிறது.
இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் (MG Hector), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster), எம்ஜி அஸ்டர் (MG Astor) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், எம்ஜி இஸட்எஸ் இவி காரானது, எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.
இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் இதன் விலை மிகவும் அதிகம். தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 22.58 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.50 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
இவ்வளவு விலை கொடுத்து அனைவராலும் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியாது. எனவே எம்ஜி நிறுவனம் மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், எம்ஜி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை வரும் ஜனவரி 5ம் தேதி இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. இது இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள இரண்டாவது எலெக்ட்ரிக் காராக இருக்கும்.