பெங்களூரு
பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு 219 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் 201 ரன்கள் எடுத்தால் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி ரன்ரேட் அடிப்படையில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடலாம் என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடியது.
பிளே-ஆப்பை எட்ட கடைசி ஓவரில் 17 ரன் தேவையாக இருந்தது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் வீசினார். இதில் புல்டாசாக வந்த முதல் பந்தை டோனி சிக்சருக்கு தூக்கினார். 110 மீட்டர் தூரத்துக்கு பறந்த அந்த பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது.
அடுத்த பந்தில் டோனி (25 ரன்) கேட்ச் ஆனார். அதன் பிறகு யாஷ் தயாள் சாதுர்யமாக ஆப்-ஸ்டம்புக்கு வெளியே பந்துகளை போட்டு அடிக்க விடாமல் செய்து விட்டார். ஜடேஜா (42 ரன், நாட்-அவுட்) களத்தில் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சென்னை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்களே எடுக்க முடிந்தது.
இந்த நிலையில் பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியதற்கு டோனியும் ஒரு காரணம் என்று பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். வெற்றிக்கு பிறகு வீரர்களின் ஓய்வறையில் ஜாலியாக பேசிய தினேஷ் கார்த்திக், “இந்த ஆட்டத்தில் எங்களுக்கு சாதகமாக நடந்த ஒரு விஷயம், டோனி 110 மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடித்தது தான். அந்த பந்து ஸ்டேடியத்திற்கு வெளியே சென்றதால் எங்களுக்கு புதிய பந்து கிடைத்தது. புதிய பந்து எங்களது எங்களது வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது” என்று குறிப்பிட்டார்.