Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇலங்கைஇலங்கை ஜனாதிபதி தேர்தல் - சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்க திட்டம்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்க திட்டம்.

இலங்கையின் 8-வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு செய்து வருகிறது.

இதன்படி, நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் தற்போது கொண்டு செல்லப்படுகின்றன. நாடு முழுவதும் 12,845 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

முதல் முறையாக கார்டு போர்டுகளினாலான வாக்கு பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தலில் சுமார் மூன்று லட்சம் அரசாங்க அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிப்பர். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் போது காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த முறை வாக்குச்சீட்டு பெரிதாக உள்ளதால், வாக்களிப்பு ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு சின்னத்தை அடையாளம் கண்டுக் கொள்ள அதிக நேரம் தேவைப்படுவதை கருத்தில் கொண்டே நேரம் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக இந்த முறை 60,175 போலீஸ் உத்தியோகத்தர்களும், 8,080 சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், தேவை ஏற்பட்டால் இராணுவ பாதுகாப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வாக்களிப்புக்காக தமது சொந்த பிரதேசங்களை நோக்கி பயணிக்கும் வாக்காளர்களுக்கான சிறப்பு போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,800 பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது. கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதி கருதி, சுமார் 1,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மக்கள் வாக்களிக்கும்போது முகத்தை மறைக்கும் விதத்தில் ஆடைகளோ அல்லது மூக்கு கண்ணாடியோ அணிந்திருந்தால், அடையாளத்தை உறுதி செய்துக் கொள்வதற்காக அவற்றை அப்புறப்படுத்தும் அதிகாரம், தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், வாக்களிப்பு நிலையத்திலுள்ள இரண்டாவது அதிகாரி வாக்காளரின் பெயரை கூறியதன் பின்னர் சிறிது நேரத்தின் பின்னரே முகத்தை மூடும் வகையிலான ஆடையை மீண்டும் அணிய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாக்களிப்பு நிலையங்களிலுள்ள அதிகாரிகளுக்கு வாக்காளர் மீது சந்தேகத்தை தோன்றக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியில்லாத ஒருவருக்கு வாக்குச்சாவடிக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். வாக்குச்சாவடிக்குள் தேர்தல் அதிகாரி அல்லது அவரது அனுமதியை பெற்றவர்களுக்கு மாத்திரமே தொலைபேசியை பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சமூக வலைத்தளங்களில் போலியாக பிரசாரங்கள், வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையிலான பிரசாரங்கள், இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமக்கு தொடர்ந்தும் புகார்கள் கிடைக்கப்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான போலி பிரசாரங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments