மும்பை
இந்திய பங்குச்சந்தைகள் 2வது நாளாக மீண்டும் சரிவைச் சந்தித்தன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 202 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. நிப்டி 61புள்ளிகள் சரிந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் நடப்பாண்டில் 2020 ஜனவரி மாதத்தில் 3.1 சதவீதமாக அதிகரிப்பு. தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது போன்ற காரணங்களால் இன்று வர்த்தகம் துவங்கும் பொழுதே சென்செக்ஸ் சரிவுடன் தொடங்கியது. இறுதியில் சென்செக்ஸ் 202.05 புள்ளிகள் சரிந்து 41,275.74 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 61.20 புள்ளிகள் சரிந்து 12,113.45 புள்ளிகளில் நிலைபெற்றது.
இன்டஸ்இன்ட் வங்கி 4.38 சதவீதம் சரிந்தது, பவர் கிரிட், எஸ்பிஐ, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன. பாரதி ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகள் 4.69 சதவீதம் அதிகரித்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு (14-02-2020) காலை வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது 2 காசுகள் சரிந்து ரூ.71.33 காசுகளாக இருந்தது. இன்று மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.37 காசுகளாக நிலைபெற்றது. நேற்று வர்த்தக இறுதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.31 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.