சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் ஜோடியாக நடித்து ராணா இயக்கி உள்ள ‘நான் சிரித்தால்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகை குஷ்பு, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா மற்றும் ஆதி, ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகை குஷ்பு பேசியதாவது:
அவ்னி மூவிஸ் பட தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது எனக்கும், கணவர் சுந்தர்.சிக்கும் இருந்த கனவு. எங்கள் இருவருக்கும் தெரிந்த விஷயம் சினிமாதான். சினிமாவே மூச்சு. சினிமாவை தவிர வேறு தொழில் தெரியாது. சினிமாவை மட்டுமே நேசிக்கிறோம். நாங்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே சினிமாவில்தான் இருக்கிறோம்.
எனவேதான் படங்கள் தயாரிக்க தொடங்கினோம். எல்லா படங்களும் நன்றாக ஓட வேண்டும். தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது. அவர்கள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஒரு பாடலுக்கு இசையமைக்க வந்த ஆதி இப்போது குடும்பத்தில் ஒருவராகிவிட்டார்.
தூக்கத்தில் எழுந்து பார்த்தால் கூட சுந்தர்.சி ஆதியுடன் பேசிக்கொண்டு இருப்பார். என்னுடைய சக்களத்தி என்றே ஆதியை சொல்லலாம். எங்களுக்கு கருத்து, கஷ்டங்கள் ஆகியவற்றை சொல்லும் படம் எடுக்க விருப்பம் இல்லை. அனைவரையும் மகிழ்விக்கும் பொழுதுபோக்கு படங்களை தொடர்ந்து தயாரிப்பதில் உறுதியோடு இருக்கிறோம். இவ்வாறு பேசினார்.