சென்னை
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது நடைபெற்ற விபத்து காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். இந்த நிலையில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து இன்று கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியது:
இது போன்ற விஷயங்கள் இனி நடக்க கூடாது. இதற்கு தேவையான விஷயங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த சினிமா துறை இதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். இது நாம் செய்ய வேண்டிய விஷயம். நாம் பல கோடி சம்பாதிக்கிறோம்.
100 கோடி, 200 கோடி என்று மார் தட்டிக்கொள்கிறோம். ஆனால் கடை நிலை ஊழியர் ஒருவருக்கு பணம் கொடுக்க முடியாமல், அவர்களை பாதுகாக்க முடியாமல் நாம் கஷ்டப்படுகிறோம். நாம் இதற்கு வெட்கப்பட வேண்டும். ஒரு தனிப்பட்ட நபராக எனக்கு இது அவமானம். என்னால் முடிந்தது நிதி உதவி மட்டும்தான்.
இதில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவருக்கு நான் நிதி உதவி அளிக்கிறேன். இதில், காயம் அடைந்தோர், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கிறேன். இவர்கள் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மிகப்பெரிய உறவை இழந்து இருக்கிறார்கள். நானும் விபத்தை சந்தித்து இருக்கிறேன். விபத்தில் இருந்து வெளியே வருவது மிகவும் சிரமம்.
கிருஷ்ணா என்னிடம் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இரண்டு நாட்கள் முன்புதான் வந்து அவர் என்னிடம் இந்தியன் 2 குழுவில் இணைந்தது குறித்து பேசினார். ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை. அதேபோல் மதுவும், சந்திரனும் எனக்கும் மிகவும் நெருக்கம். இவர்களுக்காக நான் அறிவித்த தொகை, கொஞ்சம் கூட போதாது.
ஆனால் இது அவர்களின் குடும்பத்திற்கு கொஞ்சம் உதவும். இது சிகிச்சையாக இருக்க முடியாது. இப்படி கஷ்டப்பட்டு பணியாற்றும் மக்களுக்கு இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு வேண்டும். இது நம்முடைய கடமை என்று கமல்ஹாசன்,. இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்தை எனது குடும்பத்தில் நடந்த விபத்தாக பார்க்கிறேன் என்றார்.