சவுதி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வளைகுடா நாடுகள் பலவற்றிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்காவில் புனித பயணம் மேற்கொள்வதற்கு சவுதி அரேபியா கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்காரணமாக வரலாற்றிலேயே முதல்முறையாக, மெக்காவிலுள்ள பெரிய மசூதி பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
உலகிலேயே அதிகமான மக்கள், ஆன்மீக யாத்திரை செல்லக்கூடிய புனித தலங்களில் ஒன்று, மெக்காவில் உள்ள பெரிய மசூதி பகுதி. ஆனால் முதல் முறையாக இவ்வாறு ஆள் அரவமின்றி காட்சி அளிக்கக்கூடிய இடமாக மாறியுள்ளது காண்போரின் இதயத்தை கனக்கச் செய்துள்ளது.
பல்வேறு நெட்டிசன்கள் இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, “கனவிலும் நினைத்திராத நிகழ்வு இது” என்று தங்களது ஆதங்கத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு ஈரான். அங்கு நூற்றுக்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்தான் சவுதி அரேபியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கியது.
கடந்த 2 வாரங்களில், ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், சீனா, சீன தைபே, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், தென் கொரியா லெபனான், மக்காவோ, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, சிரியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், வியட்நாம், யேமன் ஆகிய நாடுகளில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் சவுதிக்குள் நுழைய முடியாது.
இதேபோல, விமான சிப்பந்திகளும், சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வளைகுடா கூட்டமைப்பு (கல்ப்) நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி தேசிய அடையாள அட்டையுடன் சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் கண்டிப்பாக தங்கள் பாஸ்போர்ட்டுடன் வந்தாக வேண்டும். சவூதி அரேபியாவை சேர்ந்தவர்கள், மீண்டும் தாய்நாடு திரும்பி வரும்போது, தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு வந்து கொள்ளலாம். அவர்களுக்கு பாஸ்போர்ட் விதிமுறை பொருந்தாது.
மெக்காவில் புனித யாத்திரை வருவோர் ஒன்று கூடுவதால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வைரஸ் தாக்கம் பரவி விடக்கூடாது என்பதால் அங்கும் தொழுகை நடத்துவதற்கும், யாத்ரீகர்கள் வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அங்கு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்துதான் மெக்கா மசூதி இவ்வாறு ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.
ஈரானை பொருத்தளவில், வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடிய கூட்டுத் தொழுகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்படவில்லை. நெட்டிசன்கள் ஷேர் செய்யக்கூடிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் என்பது நேற்று மற்றும் நேற்று முன்தினம் எடுக்கப்பட்டவை என்று தெரிகிறது.
இன்று தொழுகை நடைபெற்ற போதிலும்கூட வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது என்று அங்கிருந்து வரக்கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்ஸாம் புனித நீர் கிணறும் மூடப்பட்டுள்ளது. வழிபாட்டாளர்கள் உணவு அல்லது தண்ணீர் உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இஸ்லாமிய நம்பிக்கையில் நடைமுறையில் உள்ள இடிகாஃப் நிறைவேற்றும் பொருட்டும் கூட, வழிபாட்டாளர்கள் மசூதியில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு சவுதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவுதியில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.