ரியாத்
சில தினங்களுக்கு முன், கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த, சவுதி அரசின், சவுதி அராம்கோ நிறுவனம், அடுத்து, உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக, ரஷ்யாவை மிரட்டியுள்ளது. இதனால், சவுதி, ரஷ்யா இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த, 7ம் தேதி, மேற்காசிய நாடான சவுதி அரேபியா தலைமையிலான, கச்சா எண்எெணய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும், கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷ்யாவும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு குறித்து, நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது.
இதற்கு, ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை’ என, ரஷ்யா தெரிவித்தது தான், காரணம். இதையடுத்து, சவுதி அராம்கோ, கச்சா எண்ணெய் விலையை, 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைத்தது. அத்துடன், ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, ரஷ்யா வழங்குவதை விட, நான்கு மடங்கு குறைந்த விலையில், கச்சா எண்ணெய் வழங்குவதாக, சவுதி அராம்கோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் முதல், கச்சா எண்ணெய் உற்பத்தியில், தினமும், 25 லட்சம் பீப்பாயை அதிகரிக்க உள்ளதாக, நேற்று சவுதி அராம்கோ அறிவித்தது. இதன் மூலம், ஒரு நாள் கச்சா எண்ணெய் உற்பத்தி, 98 லட்சம் பீப்பாயில் இருந்து, 1.23 கோடியாக உயரும். இதனால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை, மேலும் கடுமையாக வீழ்ச்சி அடையும்.
ரஷ்யாவுக்கு எதிராக சவுதி அராம்கோ எடுத்துள்ள நடவடிக்கையால், அமெரிக்காவின் ‘ஷெல்’ எரிபொருள் நிறுவனங்கள் மூடப்படும் அபாயமும் உள்ளது. ‘கொரோனா வைரஸ்’ பிரச்னையால், உலகளவில் தேவை குறைந்து வரும் நிலையில், சவுதி, கச்சா எண்ணெய் விலையை குறைத்து, உற்பத்தியை அதிகரிப்பது, அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என, சந்தையாளர்கள் தெரிவித்தனர்.