Friday, April 12, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்யெஸ் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிய அனில் அம்பானிக்கு அமலாக்க பிரிவினர் நோட்டீசு

யெஸ் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிய அனில் அம்பானிக்கு அமலாக்க பிரிவினர் நோட்டீசு

புதுடெல்லி

இந்தியாவின் முதல் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி. இவர்களது தந்தை மரணத்திற்கு பிறகு இருவரும் சொத்துக்களை பிரித்துக் கொண்ட நிலையில் அனில் அம்பானியின் தொழில்கள் வீழ்ச்சி அடைந்தன. பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதால் அவர் கடும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறார்.

தற்போது மோசடி அம்பலமாகி இருக்கும் யெஸ் வங்கியில் அனில் அம்பானி ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார். இந்த வங்கியின் அதிபர் ராணா கபூர் பல தொழில் அதிபர்களுக்கு அதிக அளவில் கடனை அள்ளி கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த கடன் வாராக்கடன்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனங்களிடம் இருந்து ராணா கபூர் லஞ்சம் பெற்றுள்ளார். அவர் 78 போலி நிறுவனங்களை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லஞ்ச பணம் அந்த நிறுவனங்களுக்கு வந்துள்ளது.

வங்கி கொடுத்த கடன்களில் ரூ.30 ஆயிரம் கோடி வரை வாராக்கடனாக மாற்றப்பட்டிருந்தது. அதற்காக அவர் லஞ்சம் பெற்றிருக்கிறார். பெரும்பாலும் அதிக அளவில் கடன் பெற்றவர்களிடம் இருந்து இவ்வாறு லஞ்ச பணம் பெறப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் அனில் அம்பானியிடம் இருந்தும் அவர் பணம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் அமலாக்க பிரிவினருக்கு எழுந்துள்ளது. எனவே அனில் அம்பானி உள்ளிட்ட அதிக அளவில் கடன் வாங்கிய தொழில் அதிபர்களை அழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி அனில் அம்பானிக்கு அமலாக்க பிரிவினர் நோட்டீசு அனுப்பி உள்ளனர். அதில் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. அனில் அம்பானி இன்று ஆஜராவா? என்பது தெரியவில்லை. அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்றும் குறிப்பிடப்பட வில்லை.

ஆனால் அனில் அம்பானி பெயர் இழுக்கப்பட்டதுமே அந்த நிறுவனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாங்கள் யெஸ் வங்கி விவகாரத்தில் நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. யெஸ் வங்கி அதிபருக்கும், எங்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. நாங்கள் வர்த்தக ரீதியாக முறைப்படி அவர்களிடம் கடன் வாங்கி இருக்கிறோம். இதில் தறவான நடைமுறைகள் எதுவும் கடை பிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

அனில் அம்பானி மட்டுமல்லாமல் வோடா போன் நிறுவனம், டி.எச்.எப்.எல் ரியல் எஸ்டேட் நிறுவனம், எஸ்.எல். குரூப், சி.ஜி. பவர், ஹாக்ஸ் அன்ட் ஹிங்ஸ், ரேடியஸ் டெவலப்பர், ஐ.எல்.எப்.எஸ். போன்ற நிறுவனங்களும் அதிக அளில் கடன் வாங்கி உள்ளன.

பின்னர் அவர்களுடடைய கடன் பெரும்பாலும் வாராக் கடனாக மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் கோடி வாரா கடனில் ரூ.20 ஆயிரம் கோடி வரையிலான பணத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று அமலாக்க பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த வங்கி வழங்கிய மொத்த கடன் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடியில் சுமார் ரூ.42 ஆயிரம் கோடி பலவீனமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் திவால் அறிவித்துள்ளன. அல்லது செயல்படாத நிலையில் உள்ளன. அதன் மூலமும் முறைகேடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments