ரோம்
இத்தாலியில் கொரோனாவின் உக்கிர தாண்டவத்துக்கு ஒரே நாளில் 793 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,825 ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தாக்கிய கொரோனாவைரஸ் தற்போது அங்கு ஓய்ந்திருக்கிறது என கூறப்படுகிறது. ஆனால் உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது கொரோனா.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கையும் 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக இத்தாலி தேசத்தையே கொரோனா நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. இங்கு ஒரே நாளில் 793 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,825 ஆக அதிகரித்துள்ளது
இத்தாலியில் 53,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பிரான்சிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரான்சில் நேற்று ஒரே நாளில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்திருக்கிறது.