கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சீனா அளித்துள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீனாவை விட அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அது தவறான செய்தி என பதிலளித்த ட்ரம்ப், சீனா அளித்துள்ள தகவல்கள் உண்மை தானா என்பது யாருக்கு தெரியும் என்றார்.
மேலும் ஆரம்பம் முதலே கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீனா மூடி மறைக்கவே முயன்றதாகவும், அமெரிக்க உளவுத்துறையும் சீனாவின் புள்ளி விவரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பியள்ளதாகவும் அவர் கூறினார்.
சீனாவுடன் நல்லுறவு நீடிக்கும் போதிலும், கொரோனா விஷயத்தில் சீனா நம்பத்தகுந்த நாடு அல்ல என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.