இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக தொற்று உறுதிசெய்யப்படும் பலருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை எனவும், இது கவலை அளிக்கக்கூடிய தகவல் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த நிலை கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான காரணமாக அமைய வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக தொற்று என்ற நிலையை எட்டிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.