அடுத்த இரண்டு நாட்களுக்கு கொரோனாவைக் கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பி.சி.ஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை முடிவுகள் வர நாள் கணக்கில் ஆகிறது. அதனால், அறிகுறி தெரியாத வீடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் சமூகப்பரவல் நிலையை அடையாமல் இருக்க ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் பரிசோதனை முடிவுகள் 15 நிமிடத்திற்குள்ளாகவே முடிவுகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு அதிகமானோரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம். ஆனால், இது மட்டுமே இறுதியான பரிசோதனை முடிவு இல்லை.
ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மீண்டும் பி.சி.ஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை செய்யப்படும். சீனாவில் இருந்து விரைவான கொரோனா பரிசோதனைக்காக வந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சீனாவிலிருந்து தயாரித்து இந்தியா இறக்குமதி செய்த கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் தரத்தில் மிகவும் மோசமாக இருப்பதால் பயன்பாட்டை நிறுத்தியதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டின் மூலம் நோயாளிகளின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தால் 5.4 சதவீதம் அளவுக்கு மட்டுமே துல்லியத்தன்மை இருக்கிறது என்று ராஜஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு கொரோனாவைக் கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரு தினங்களுக்கு கொரோனாவைக் கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம். ரேபிட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக வெளியான தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளின் தரத்தினை பரிசோதித்து வருகிறோம், மீண்டும் இந்தக் கருவிகளை கொண்டு சோதனையை தொடங்குவது பற்றி விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.