Tuesday, September 10, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்ஆன்லைன் ஊடகத்தின் நிறுவனர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பபெற வேண்டும் - கமல்ஹாசன்

ஆன்லைன் ஊடகத்தின் நிறுவனர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பபெற வேண்டும் – கமல்ஹாசன்

கோவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உணவு கிடைக்கவில்லை, மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை என குறைகளை சுட்டிக்காட்டினால் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதா என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் முதுநிலை மாணவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படுவதில்லை என்று வெளியான செய்தியையும், மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக சிம்பிள்சிட்டி ஆன்லைன் ஊடகத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

இது அரசு ஊழியர்களை அரசுக்கு எதிராக போராடுவதற்கு தூண்டும் வகையில் இருப்பதாக கூறி கோவை மாநகராட்சி துணை ஆணையர் சுந்தர்ராஜ் என்பவரின் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து, காவல்துறையினர், சிம்ப்ளிசிட்டி ஊடகத்தின் உரிமையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜா பாண்டியனை கைது செய்துள்ளனர். அவர் மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (IPC 188) மற்றும் பொதுமக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுதல் (IPC 505(1)(b)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், பத்திரிகைத் துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கும் நிலையில், கோவையில் மருத்துவர்களுக்கு  உணவு கிடைக்கவில்லை  எனவும் கொரோனா நிவாரண உதவிகள் மக்களுக்கு சென்றடையவில்லை எனவும் உண்மையை சுட்டிக்காட்டியதற்காக சிம்பிள்சிட்டி ஆன்லைன் ஊடகத்தின் நிறுவனர் சாம் ராஜா பாண்டியன் கைது செய்யப்பட்டது சர்வதிகாரம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறையை முடக்காமல், தமிழக அரசு மற்றும் காவல்துறை சிம்பிள்சிட்டி ஆன்லைன் ஊடகத்தின் நிறுவனர் சாம் ராஜா பாண்டியன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பபெற வேண்டும் எனவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments