Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுகொரோனாவை விட பசியும், பட்டினியும் தான் பெரும் நோயாகப் போகிறது

கொரோனாவை விட பசியும், பட்டினியும் தான் பெரும் நோயாகப் போகிறது

ஊரடங்கு தொடரும் என மீண்டும் அறிவிக்கப்பட்டு விட்டது. மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், பிரச்சினை இல்லை. ஆனால் பசியோடு இருப்பார்களே…
 
கொரோனா எதிர்ப்பு போரில் உலகிற்கே வழிகாட்டுகிறோம் என பிரதமர் மோடி மார்தட்டிக் கொள்கிறார், மகிழ்ச்சி. ஆனால் அந்த பிரதமர் இன்றைய ஊரடங்கை அறிவிக்க வெளியில் வரவில்லையே. இது வரை அவர் தானே அறிவித்து வந்தார். ஏன் இந்த முறை உள்துறை அறிவித்திருக்கிறது? அதுவும் அறிக்கை வாயிலாக?
 
ஊரடங்கு நீடிக்கப்பட்டதோ, அதை பிரதமர் வந்து அறிவிக்காததோ, உள்துறை அறிவித்ததோ பிரச்சினை இல்லை நமக்கு. ஊரடங்கால் பிழைப்புக்கு வழி இல்லாமல், அல்லல்படும் ஏழை மக்களுக்கு என்ன வழி என்பது தான் கேள்வியாக இருக்கிறது.
 
ஆரம்பத்தில் இருந்தே ஊரடங்கை திட்டமிடாமல் அறிவித்தது தான் பிரச்சினை என்பதை எல்லோரும் திரும்ப, திரும்ப சொல்லி வருகிறார்கள். 
 
ஒவ்வொரு நாடும் ஊரடங்கை அறிவித்த போதே, அரசு மக்களுக்கு என்ன உதவி அளிக்கும், வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு என்ன உதவி கிடைக்கும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு என்ன உதவி கிடைக்கும் என்பவற்றை அறிவித்து விட்டனர்.
 
இந்தியாவில் மட்டும் தான் ஊரடங்கை அறிவிக்கும் போதெல்லாம் கை தட்டுதல், விளக்கேற்றுதல் போன்ற டாஸ்க்கள் வழங்கப்பட்டன, மாண்புமிகு பிரதமரால்.
 
இந்த முறை,ஊரடங்கை பிரதமர் அறிவிக்காததால், புதிய டாஸ்க் இல்லை என்பது மாத்திரம் தான் சற்றே ஆறுதலான விஷயம்.
 
இப்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அது மூன்று வண்ண மண்டலங்களுக்கு தகுந்தவாறு பிரிக்கப்பட்டுள்ளது. பச்சை மண்டல மாவட்டத்தில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்ளது. அங்கு தான் சில தளர்வுகள். மற்ற மாவட்டங்கள் ஆரஞ்ச் மற்றும் சிகப்பு மண்டலங்களில் உள்ளன.
 
நேற்றும், இன்றும் சில மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு, மந்திரிகள் சிகிச்சை பெற்று செல்பவர்களுக்கு மலர் கொத்து கொடுத்து கொண்டாடியுள்ளனர். கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரே கொரோனாவை ஒழித்தவர் போல் பெருமிதமாக உடல்மொழியை வெளிப்படுத்தினார். 
 
மாலை கரூர் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இப்படி கொரோனா எப்போது தாக்கும், மண்டலங்கள் நிறம் எப்போது மாறும் என்று யாராலும் கணிக்க முடியாது.
 
இந்த ஆட்சியாளர்கள் துவக்கத்திலிருந்தே கொரோனாவை தங்களை போல ஒரு காமெடி அய்ட்டமாக பார்க்கிறார்களோ என சந்தேகமாக இருக்கிறது. 
 
ஆரம்பத்திலேயே, இதை துவக்கி வைத்தவர் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி தான். இந்தியாவிலேயே, தமிழகத்தில் கொரோனா வராது என உறுமினார் சட்டமன்றத்தில். ஆனால், கொரோனா அவரை கண்டு கொள்ளாமல் வந்து விட்டது.
 
பிறகு, கொரோனா பரவாது என்றார். பரவியே விட்டது. அடுத்து கொரோனாவுக்கு மூன்று நாட்கள் கெடு கொடுத்தார். அதற்கும் கொரோனா பெப்பே காட்டி விட்டது.
 
ஒவ்வொரு நாள் கொரோனா அப்டேட் கொடுக்கும் போதும், தப்லிக் மாநாடு, ஒன் சோர்ஸ் போன்ற வார்த்தைகளை அழுத்தி, அழுத்தி சொன்னார்கள். இப்போது அது எதற்கும் தொடர்பில்லாமல், சென்னை கொரோனா தலைநகரமாக மாறிக் கொண்டிருக்கும் போது, பாதி தொற்றாளர்களுக்கு சோர்ஸே தெரியவில்லை என்கிறார்கள். அதையும் சென்னை மாநகராட்சி கமிஷ்னரை விட்டு சொல்ல சொல்கிறார்கள். இப்படி கொரோனாவை வைத்து அரசியல் காமெடி செய்து ஓய்ந்திருக்கிறார்கள்.
 
கொரோனாவை விட, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டம் பெரிதாக இருப்பதை மறக்கடிக்கவே, பல்வேறு திசை திருப்பும் நாடகங்களையும் அவ்வப்போது அரங்கேற்றுகிறார்கள்.
 
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை பெரிதாக வெடித்த போது, பிரதமர் அது குறித்து வாய் திறக்கவே இல்லை. ஆயிரம் கிலோமீட்டர், அய்நூறு கிலோமீட்டர் என நடந்தே வீடு திரும்பியோரும் உண்டு, அதனால் இறந்தோரும் உண்டு. முதல் ஊரடங்கை அறிவித்த நாற்பதாவது நாளில் தான், அந்த இடம்பெயர் தொழிலாளர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை வந்திருக்கிறது. சிறப்பு ரயில் ஏற்பாடு செய்கிறார்கள். மக்கள் மீது அக்கறை உள்ளவர்களாக இருந்தால், அப்போதே இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். பல இறப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
 
இப்பொழுது, வீடு திரும்பும் தொழிலாளர்களின் வயிற்றுப் பிரச்சினைக்கு எந்த தீர்வும் சொல்லப்படவில்லை. உள்ளுரில் வேலை கிடைக்காமல் தான் தூர தேசம் போனார்கள் இவர்கள். குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வட இந்திய மாநிலத்தவர் தான் அதிகம். கேரளா போன தமிழர்களும் உண்டு. இவர்களுக்கு ஊரில் வேலை கிடையாது, ஏற்கனவே. எனவே இவர்களுக்கான எதிர்காலம் என்ன என்பது தான் இன்றைக்கு பூதாகரமாக எழுந்து நிற்கும் கேள்வி. 
 
மத்திய அரசுக்கு இது குறித்த கவலை இல்லை என்பதை அதன் சில நடவடிக்கைகள் தெளிவுப்படுத்தி விட்டன. எப்போது திறக்கும் என தெரியாத கல்லூரிக்கு நுழைவுத் தேர்வு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வருதல் போன்ற மக்கள் விரோத வேலையில் இறங்கி இருக்கிறது.
 
மக்களிடம் நிதி கேட்டு வேண்டுகோள் விடுக்கும் பிரதமரின் இன்றைய நடவடிக்கை தான் உச்சகட்ட மிருகத்தனம்.
 
20, 000 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள, தனது கனவுத் திட்டமான புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து காணொலிக் காட்சியில்  விவாதித்தாராம். நாடாளுமன்றக் கட்டிடம் கட்டும் வேலையை , மத்திய அரசு துவங்கி விட்டது.  நாடே கொரோனா பிரச்சினையில் அலறிக் கொண்டிருக்கும் போது, மத்திய அரசு இந்த திட்டத்தில் தீவிரமாக இருக்கிறதென்றால் இவர்களது அக்கறை எதில் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
 
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 2,000 கோடியை கொரோனாவுக்கு திருப்பியது போல், இந்தத் திட்டத்தை ஒத்தி வைத்து கொரோனாவை ஒழிக்க இந்த 20,000 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கலாமே.
 
கீழே இரண்டு படங்களை இணைத்துள்ளேன். பீகார் தலைநகர் பாட்னாவில், ஒரு வேளை உணவுக்காக நீண்டும் நிற்கும் மக்கள் வரிசை இந்து பத்திரிக்கையில் இடம் பெற்ற படம். அடுத்த இரண்டு படங்கள் ஆளுங்கட்சி ஆதரவுப் பத்திரிக்கையான தினத்தந்தியில் இடம்பெற்றவை. உணவுக்காக, தமிழகத்தின் திருச்சி நகரில், காவிரி பாலத்தில் உட்கார்ந்திருக்கும் ஏழை மக்கள். வட மாநிலங்களில் பசியால் தவளையையும், பாம்பையும் சுட்டு சாப்பிடும் செய்திகளும் வந்துக் கொண்டிருக்கின்றன.
 
பட்டினியால் தவிக்கும் இந்த மக்களை புறந்தள்ளி விட்டு தான் ரூபாய் 20,000 கோடியில் நாடாளுமன்ற கட்டிடம் கட்டுகிறார் மாமன்னன் மோடி.
 
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், “பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கும் மக்களிடம் அரசு பிச்சை எடுப்பதா?”, என்று கேட்ட போது, கொதித்த மோடியின் பக்தர்களுக்கு கீழ்கண்ட படங்கள் சமர்பணம்.
 
 
மக்கள் ஊரடங்கில் வீட்டில் இருந்தால் கொரோனா தாக்காது தான். ஆனால் எங்கிருந்தாலும் பசி தாக்கும், பட்டினி கொல்லும். பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து எச்சரித்தும் கவலையற்றிருக்கின்றன மூட அரசுகள்.
 
கொரோனாவை விட பசியும், பட்டினியும் தான் பெரும் நோயாகப் போகிறது !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments