Wednesday, September 11, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழகத்தில் 7-ந்தேதி முதல் மதுக்கடைகள் திறப்பு

தமிழகத்தில் 7-ந்தேதி முதல் மதுக்கடைகள் திறப்பு

தமிழகத்தில் மார்ச் 24-ந்தேதியில் இருந்து 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக அரசுக்கு நாள் ஒன்றுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைத்து வந்த ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலான வருமானம் நின்று போனது. இதுவரை சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.

ஊரடங்கு காலத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், வருகிற 7-ந்தேதி முதல் (வியாழக்கிழமை) சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபான கடைகளை, சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்து உள்ளது. எனினும் மதுபான கூடங்களை (‘பார்’கள்) திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபான கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலும் மதுபான கடைகளை வருகிற 7-ந்தேதி முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. எனினும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் திறக்கப்படமாட்டாது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபான கடைகள் மட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது.

மதுபான கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும். மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது. பார்’களுக்கு அனுமதி இல்லை. அனைத்து மதுபான கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மதுபான கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபான கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், மதுபான கூடங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments