தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணி கள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் The Epidemic Diseases Act and Regulations பிரிவு 8-ன்படி தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் ரத்னா சித்த மருத்துவமனை எனும் பெயரில் மருத்துவமனை நடத்தி வந்த தணிகாசலம் என்பவர், தன்னிடம் 6 கொரோனா நோயாளிகளை ஒப்படைத்தால் ஒரே நாளில் குணமடைய செய்து விடுவேன் என்றும், அதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பதிவு வைரலான நிலையில், தவறான, ஆதாரமற்ற தகவல்களை அவர் பரப்புவதாகவும், பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால், போலி சித்த மருத்துவர் தணிகாசலம் மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க, இயக்குநர், இந்திய மருத்துவம், ஹோமி யோபதி துறை சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இவர் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்றும் போலி சித்த மருத்துவர் என்றும் தமிழக சுகாதாரத்துறை அண்மையில் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
இதையடுத்து, தணிகாசலம் மீது தொற்றுநோய் தடுப்பு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தடை உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தணிகாசலத்தை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.