மலப்புரம்
கேரள மாநிலம் மலப்புரம் அருகே கர்ப்பிணி யானை ஒன்று கடந்த வாரம் புதனன்று வெள்ளியாற்றில் நின்ற நிலையில் இறந்து இருந்தது. அந்த யானையின் இறப்புக்கான காரணம் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. அதற்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
காட்டு யானை ஒன்று உணவு தேடி கிராமத்திற்கு வந்துள்ளது. சாலையில் நடந்து சென்ற அதற்கு யாரோ வெடி பொருட்கள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை தந்துள்ளனர். எல்லோரையும் நம்பிய அவள், அதை வாங்கி உண்ட போது வெடித்தது. இதனால் அதன் வாய் மற்றும் நாக்கு படுகாயமடைந்தது. அப்போது அவள் தன்னைப் பற்றி யோசிக்காமல் பெற்றெடுக்கப் போகும் குட்டியை பற்றி நினைத்து அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் அவள் யாரையும் தாக்கவில்லை, ஒரு வீட்டையும் நசுக்கவில்லை. அவள் நன்மை நிறைந்தவள். அவளுக்கு தகுதியான பிரியாவிடை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, ஒரு லாரியில் ஏற்றி காட்டுக்குள் கொண்டு சென்றோம். அவள் விளையாடிய மற்றும் வளர்ந்த நிலத்தில் விறகுகளின் மீது கிடத்தினோம். பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் அவள் தனியாக இல்லை என்று கூறினார். எரியூட்டும் முன்பு அவள் முன் குனிந்து இறுதி மரியாதை செலுத்தினோம். இவ்வாறு பெரும் வலியுடன் கூடிய பதிவை எழுதியுள்ளார்.
வெடிபொருள் வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளது. ஈக்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து தப்பிக்க அந்த கர்ப்பிணி யானை உயிர் பிரியும் முன் வலியுடன் ஆற்றில் நின்றிருக்கும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.