பாட்னா
இந்தியாவின் தொழிற்சங்கத் தலைவர்களில் முதன்மையானவரும், முன்னாள் இராணுவ அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முழு உருவச்சிலையை காணொலி மூலம் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் திறந்து வைத்தார்.
இந்த சிலை முசாபர்பூரில் உள்ள சிட்டி பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. எமெர்ஜென்சி காலகட்டத்தில் 1977-ல் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிறையிலிருந்தே முசாபர்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முசாபர்பூர் தொகுதியில் மொத்தம் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார்.
பாட்னாவில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திலிருந்து காணொலி மூலம் ஜார்ஜ் பெர்னாண்டஸின் சிலையை நிதீஷ் குமார் திறந்து வைத்தார். சிலையின் மாதிரிக்கு நிதீஷ் குமார் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் தீபக் குமார், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சஞ்சல்குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.