தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
தமிழகத்தில் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்கட்சிகள் , பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் அதிருப்தி வெளிப்படுத்தி வந்தனர். சுமார் 10 லட்சம் மாணவர்கள் உயிருடன் விளையாடக் கூடிய விஷயம் இது என்று அவர்கள் ஆதங்கம் வெளிப்படுத்தினர்.
மேலும், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பாக மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் இன்று பகல் 12.20 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை வலுத்து வருகிறது. உயர்நீதிமன்றமும் தேர்வை தள்ளி வைக்க அரசு பரிசீலிக்க கேட்டுக் கொண்டது. இதை அரசு பரிசீலித்தது. சென்னையிலும், சில மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பு இல்லை என்று இது சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே பெற்றோர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், மற்றும் நோய் தொற்று போக்கை கருத்தில் கொண்டும், மாணவர்களை நோய்த் தொற்றிலிருந்து காக்க, வருகிற 15ம் தேதி முதல் (ஜூன் 15) துவங்கவிருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், 11ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
எனவே, இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவேடு அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண்களும் வழங்கப்படும்.
பிளஸ் 2 தேர்வை பொறுத்தளவில், ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. மறு தேர்வு, எப்போது நடத்துவது என்பது குறித்து பிறகு அறிவிக்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
|