Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்உடுமலை சங்கர் கொலை வழக்கு - கவுசல்யா தந்தை விடுவிப்பு, குற்றவாளிகள் தண்டனை குறைப்பு

உடுமலை சங்கர் கொலை வழக்கு – கவுசல்யா தந்தை விடுவிப்பு, குற்றவாளிகள் தண்டனை குறைப்பு

உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை கடந்த 2015ல் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். இவர்கள் உடுமலைப்பேட்டை, கொமரலிங்கத்தில் உள்ள சங்கர் வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி, கவுசல்யாவும் சங்கரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், இருவரையும் கத்திகளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
தலையில் பலத்த வெட்டுக்காயமடைந்த கவுசல்யா சிகிச்சைபெற்று குணமடைந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.

கவுசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி மற்றும் அன்னலட்சுமி உள்ளிட்ட, 11 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்றது. 1,500 பக்கத்திற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகிய மூவரும் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2017ம் ஆண்டு டிச., 12ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த, 9 பேரில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 9வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பும் மேல் முறையீடு செய்தது. தூக்குத் தண்டனையை உறுதிசெய்யும்படியும் அரசுத் தரப்பு கோரியது.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்திய நாராயணா, நிர்மல் குமார் அமர்வு விசாரித்து வந்தது. பிப். 12ம் தேதி வாதங்கள் நிறைவடைந்தன. பிப். 27ம் தேதி எழுத்து பூர்வமான வாதங்கள் அளிக்கப்பட்டன. அதற்குப் பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பில் முதல் குற்றவாளியான சின்னச்சாமியின் தூக்குத் தண்டனை ரத்துசெய்யப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார். மற்ற ஐந்து குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்களுக்கு எந்த தளர்வும் அளிக்கக்கூடாது என்றும் இவர்கள் குறைந்தது 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தன்ராஜ் என்பவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்துசெய்யப்பட்டது. மணிகண்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த ஐந்தாண்டுகால சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டது செல்லும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. விடுவிக்கப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படாததாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும்’ என அரசுத் தரப்பின் கூடுதல் வழக்கறிஞர் எமிலியாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments