ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் ஏப்ரல் மாத தொடக்கத்தில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் வேகமான பரவத் தொடங்கியது. 10’க்கு 10′ என்கிற அறைக்குள் 5 முதல் 7 பேர் வரை வசிக்கும் நெருக்கடியான குடியிருப்பில், மிகப்பெரிய பேராயம் ஏற்படும் என உணர்ந்த மும்பை மாநகராட்சி, தாராவியை வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தியது. தொற்று வேகம் 12 சதவீதமாக அதிகரித்த நிலையில், அனைவரையும் வீடுகளில் முடக்கியதுடன், ஒவ்வொரு வீடாக சோதனையும், நான்கு முதல் 5 அடுக்கு தொடர்புகளும் பரிசோதனைக்கு கொண்டுவரப்பட்டன.
மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டதுடன், 350 தனியார் மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இப்படியான தீவிர நடவடிக்கைகளால் மே மாதத்தில் 4.3 சதவிதமாக குறைந்த தொற்று தற்போது 1 சதவீதம் என்கிற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் 43 பேர் மட்டுமெ பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் மூன்றாவது வாரத்தில் 19 பேராக குறைந்துள்ளது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலையில், இந்தியாவுக்கே தாராவி முன்னுதாரணமாகி உள்ளது.
மகாராஷ்டிராவுக்கும், மும்பை மாநகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.