சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராணி (32). இவர் சில தினங்களுக்கு முன் ஆன்லைன் செயலி மூலம் 599 ரூபாய் மதிப்புள்ள நைட்டி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பணத்தை தன்னுடைய கணவரின் ஏடிஎம் மூலம் ஆன்லைனிலேயே செலுத்தியுள்ளார். இந்தச் சமயத்தில் சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததால் செல்வராணிக்கு நைட்டி டெலிவரியாவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே அவர், நைட்டிக்கான ஆர்டரை கேன்சல் செய்தார். அப்போது உங்கள் பணம் திரும்ப செலுத்தப்படும் என எந்தவித குறுந்தகவலும் வரவில்லை.
இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட ஆன்லைன் செயலியின் கஸ்டமர்கேர் நம்பரை இணையதளத்தில் தேடி எடுத்து அந்த நம்பருக்கு போனில் பேசி விவரத்தைக் கூறினார். எதிர்முனையில் பேசியவர், உங்களின் பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும் என்றால் வங்கி விவரம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். உடனே செல்வராணியும் வங்கியின் விவரங்களைக் கூறியுள்ளார். பின்னர், ஏடிஎம் கார்டை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி தெரிவித்துள்ளார். உடனடியாக செல்வராணியும் ஏடிஎம் கார்டை போட்டோ எடுத்து அனுப்பினார். அடுத்து ப்ளே ஸ்டோருக்குச் சென்று ஒரு செயலியை டவுன்லோடு செய்யும்படி கூறியவுடன் அதையும் செல்வராணி டவுன்லோடு செய்துள்ளார்.
இச்சமயத்தில் வங்கியிலிருந்து செல்வராணியின் கணவரின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது. அதில் 60,000 ரூபாய் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்து செல்வராணியும் அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மீண்டும் செல்வராணி கஸ்டமர்கேர் நம்பருக்கு போன் செய்து 60,000 ரூபாய் பிடித்தம் செய்த விவரத்தைக் கூறியுள்ளார். அப்போது கஸ்டமர்கேரிலிருந்து பேசிய நபர், மீண்டும் செயலியை டவுன்லோடு செய்யக் கூறியுள்ளார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த செல்வராணி, போனிலேயே வாக்குவாதம் செய்துள்ளார். உடனடியாக கஸ்டமர் கேர் போன் நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகே செல்வராணி ஏமாந்ததை உணர்ந்துள்ளார். பின்னர் இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றார். செல்வராணியிடம் விசாரித்த போலீஸார், நீங்கள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் க்ரைம் பிரிவில் புகாரளிக்கும்படி கூறியுள்ளனர். அதனால் செல்வராணி, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவுக்குச் சென்று புகாரளித்துள்ளார்.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், “ஊரடங்கு காலகட்டத்தில் இணையதள வழி குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதனால் பொதுமக்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கப்பல்படை பொறியாளர் பிரேம் ஆனந்த் என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்மி ஆபீஸர் என்ற பெயரில் மஞ்சித் என்பவர், 50,000 ரூபாயை நூதன முறையில் ஏமாற்றினார். இதையடுத்து கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வராணியிடம் 60,000 ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பல் நூதன முறையில் ஏமாற்றியுள்ளது. ஏடிஎம் கார்டு விவரங்களை யாருடனும் தெரிவிக்க வேண்டாம் எனப் பலதடவைக் கூறியும் மோசடி கும்பலுக்கு சாதகமாக ஏமாறுபவர்கள் நடந்துகொள்கின்றனர். ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்யப்பட்ட செயலி மூலம் இந்த மோசடியை அந்தக் கும்பல் செய்துள்ளது. இணையதளத்தில் கஸ்டமர்கேர் என்று மோசடி கும்பல்கள் தங்களுடைய நம்பர்களை பதிவு செய்து வைத்துள்ளனர். அதனால் கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்வதற்கு முன் அது உண்மையான நம்பரா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறுகின்றனர்.