திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகப் பார்சல் வழியாகத் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் வழியாக வந்த பார்சலை பெறுவதற்காக வந்த ஸரித் முதலில் கைது செய்யப்பட்டார். ஸரித்துக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.டி துறையின் ஸ்பேஸ் பார்க் நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்வப்னாவுக்கும் தொடர்பு இருப்பது வெளியானதால், இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் பெற்றது.
ஆரம்பத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். பின்னர் என்.ஐ.ஏ இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்த தொடங்கியது. இந்த வழக்கின் எதிரொலியாக ஸ்வப்னாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் சிவசங்கரன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஐ.டி துறைச் செயலாளர் பதவியில் அவர் இருக்கும் நிலையில் ஒரு வருட விடுப்பில் சென்றுள்ளார். மேலும், இந்த வழக்கில் தங்கம் கடத்தியது யார், அது எங்கு செல்கிறது, இதில் தொடர்பில் உள்ள முக்கிய புள்ளிகள் யார் என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு கொச்சி என்.ஐ.ஏ கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால், அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த என்.ஐ.ஏ இன்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதையடுத்து ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை ஏழு நாள்கள் என்.ஐ.ஏ கஸ்டடியில் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஸ்வப்னாவை கஸ்டடியில் எடுப்பதற்காக என்.ஐ.ஏ நீதிமன்றம்த்தில் தாக்கல் செய்த மனுவில், இவர்கள் தங்கம் கடத்தியது ஜூவல்லரிக்காக அல்ல, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்வதற்காகத்தான் இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறியுள்ளது. மேலும், யு.ஏ.இ தூதரகத்தின் சீலும், எம்பளமும் போலியாகத் தயாரித்துப் பயன்படுத்திதான், இவர்கள் தங்கம் கடத்தியுள்ளனர். தங்கம் கடத்தல் பற்றி யு.ஏ.இ தூதரகத்துக்குத் தெரியாது. இவர்களின் இந்தச் செயல் யு.ஏ.இ-வுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை கெடுத்துள்ளது என என்.ஐ.ஏ கூறியுள்ளது.
முதலில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஃபாசில் ஃபரீத் என்பவர் மூன்றாம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். அந்தப் பெயர் தவறாக வந்துள்ளது. அதை திருச்சூர் கைப்பமங்கலத்தைச் சேர்ந்த ஃபைசல் ஃபரீத் எனத் திருத்த வேண்டும் என்று கூறியிருந்தது. இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும், பெங்களூரில் இருந்து சந்தீப் நாயரை கைது செய்த போது ஒரு பேக்கை என் ஐ.ஏ கைப்பற்றியுள்ளது. அந்த பேக்கை என்.ஐ.ஏ திறந்து பார்க்கவில்லை என்றும், சந்தீப் நாயரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பார்க்கும்போது, அதில் தங்கம் கடத்தல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த பேக்கை நீதிமன்றம் ன் முன்பு வைத்து திறக்க வேண்டும் என என்.ஐ.ஏ மனு அளித்துள்ளது. அந்த மனுகுறித்து நீதிமன்றம் நாளை முடிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பேக் திறக்கப்படும்போது தங்கம் கடத்தல் குறித்து ஆவணங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.