பொலிவியாவில் கடந்த 5 நாள்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் 400 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஜூலை 15 முதல் 20 வரை நாட்டின் சில பெரிய நகரங்களின் வீதிகள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் 400 க்கும் மேற்பட்ட இறந்த உடல்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதில், 85 சதவிகிதம் பேர் கொரோனா வைரஸால் இறந்ததாக நம்பப்படுகிறது.
கோச்சபம்பா பெருநகரப் பகுதியில் மொத்தம் 191 சடலங்களும், நிர்வாகத் தலைநகர் லா பாஸில் 141 சடலங்களும், மிகப்பெரிய நகரமான சாண்டா குரூஸில் 68 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 85 சதவிகிதம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய காவல்துறை இயக்குனர் இவான் ரோஜாஸ் தெரிவித்தார்.
அந்நாட்டின் கோச்சபம்பா மற்றும் லா பாஸ் நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலவரப்படி, பொலிவியாவில் இதுவரை 64,135 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,328 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 19,721 பேர் குணமடைந்துள்ளனர்.