டெல்லி
பிரான்சில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் இன்று ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான படை தளத்தில் தரை இறங்கின. ஐந்து ரஃபேல் போர் விமானங்களுக்கும் தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த போர் விமானங்களை முறைப்படி விமான படைதளபதி பதோரியா வரவேற்றார்.
ரஃபோல் விமானங்களை முறைப்படி கடந்த ஆண்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. இதனைத் தொடர்ந்து 5 ரஃபேல் போர் விமானங்கள் திங்கள்கிழமையன்று பிரான்ஸில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது.
ரஃபேல் போர் விமானங்களுடன் 2 சுகோய் போர் விமானங்களும் வந்தன. ஐக்கிய அரபு அமீரகத்தில் தரை இறங்கிய இந்த விமானங்கள் இன்று பிற்பகல் இந்திய வான்பரப்பில் நுழைந்தன. அப்போது ரேடியோ சிக்னல்கள் மூலம் ரஃபேல் விமானங்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த போர் விமானங்கள் மாலை 3 மணியளவில் ஹரியானாவில் அம்பாலா விமானப் படை தளத்தில் தரை இறங்கின. அங்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து “வாட்டர் சல்யூட்” மூலம் ரஃபேல் போர் விமானங்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டன. இதற்காக அம்பாலா விமானப் படை தளபகுதியில் 144 தடை உத்தரவுடன் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.
பிரான்சிடம் இருந்து மொத்தம் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதில் முதல் கட்டமாக இந்த 5 விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. 9.500 கிலோ எடை குண்டுகளுடன் மணிக்கு 2,222 கி.மீ தூரம் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது இந்த ரஃபேல் விமானங்கள். இரட்டை என்ஜின்களுடன் 50,000 அடி உயரத்தில் பறக்குக் கூடியவை ரஃபேல் விமானங்கள்.
ரஃபோல் போர் விமானங்கள், இந்தியா விமானப் படையில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சேர்க்கப்படும் வெளிநாட்டு போர் விமானங்கள் ஆகும். இந்த ரஃபேல் போர் விமானங்கள் 24.5 டன் எடை கொண்டவை. 3,700 கி.மீ தூரம் வரை பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.
ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை ரூ731 கோடி. ரஃபேல் போர் விமானத்தின் நீளம் 15.3 மீட்டர் நீளம் கொன்டது. இதன் இறக்கைகளின் நீளம் 10.8 மீட்டர். ரஃபேல் போர் விமானத்தின் உயரம் 5.3 மீட்டராகும். ரேடார்களில் இருந்து எளிதில் தப்பக் கூடிய வகையிலானது.
லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து இந்தியாவுடன் மல்லுக்கட்டி வருகிறது. இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கவும் சீனா முயற்சித்து வருகிறது. சீனாவின் இந்த அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லடாக் எல்லையில் ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.