விஜயவாடா
ஆந்திர பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு ஏற்ப நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத சூழல் காணப்படுகிறது. இதனால், அங்கிருக்கும் ஓட்டல்கள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதேபோன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காகவும் சில ஓட்டல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுபோன்று விஜயவாடா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றை, தனியார் மருத்துவமனை ஒன்று குத்தகைக்கு எடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் ஆக பயன்படுத்தி வந்தது. அந்த மருத்துவமனையில் திடீரென இன்று காலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில், 22 பேர் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களை கட்டிடத்தில் இருந்து வெளியேற்றும் பணியும் நடந்தது. மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. இந்த தீ விபத்தில் 30 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்து உள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோன்று முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சம்பவம் பற்றி அதிர்ச்சி தெரிவித்துள்ளதுடன், வருத்தமும் தெரிவித்து உள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி கண்டறிய அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மீட்பு பணிகளை மேற்கொள்ள அதன் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கூறியதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும்படியும் உத்தரவிட்டு உள்ளார்.
தீ விபத்து நடந்த ஓட்டலில் 40 நோயாளிகள் மற்றும் 10 மருத்துவ பணியாளர்கள் இருந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாநில உள்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என ஆந்திர பிரதேச அரசு அறிவித்து உள்ளது.